தமிழக சட்டப்பேரவையில் துப்புரவு பணியாளர்களுக்கான வேலைக்கு பி.இ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளை முடித்த 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
10 சுத்தம் பராமரிப்பவர் மற்றும் 04 துப்புரவு பணியாளர் பணியிடங்கள் இதில் அறிவிக்கப்பட்டிருந்தன. இப்பணியிடங்களுக்கு ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
2018 செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தொடர்ந்து அக்டோபர் 25ஆம் தேதிவரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பித்தவர்களின் கல்வித் தகுதி அடங்கிய விவரங்களை தமிழக சட்டப்பேரவை இணையதளத்தில் அரசு வெளியிட்டுள்ளது.
8 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்ட இப்பணியிடங்களுக்கு பி.இ, எம்.பி.ஏ, எம்.எஸ்.சி, என பட்ட மேற்படிப்புகள் படித்த பட்டதாரிகள் பலரும் இப்பணியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த 4,600 பேரில், 3,930 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.