சிறுபாண்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தகுதியான சிறுபான்மை மாணவர்களை அனுமதிக்காத பள்ளிகளுக்கு எதிராக தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் 50 சதவீதம் சிறுபாண்மையினர் சேர்க்கும் பள்ளிக்கே சிறுபாண்மை அந்தஸ்து என்று கடந்த 2018 ஏப்ரல் 5-ம் தேதி புதிய அரசாணையை பள்ளி கல்வித்துறை பிறப்பித்தது.
 
அதன்படி சிறுபாண்மை பள்ளிகளில் 50 சதவீதம் சிறுபாண்மையின மாணவர்களை சேர்க்க வேண்டும், மாணவர் சேர்க்கை விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி 140 கல்வி நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்தது.
 
இந்நிலையில் இறுதிகட்ட விசாரணை நீதிபதி டி.ராஜா முன்பு நடைபெற்றது. அப்போது தமிழகம் முழுவதும் உள்ள 2500 பள்ளிகளை நிர்வகிக்கும் இந்த அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறுபாண்மை பள்ளிகள் துவங்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் வழங்கப்பட்ட உரிமைய தடுக்கும் வகையில் தமிழக அரசின் இந்த அரசாணை உள்ளது என்றும், இதன் காரணமாக அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
 
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா தேசிய சிறுபாண்மை கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டத்தின் படி சிறுபாண்மை அந்தஸ்து தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
 
மேலும் தகுதியான சிறுபாண்மை மாணவர்களை அனுமதிக்காத பள்ளிகளுக்கு எதிராக தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.