அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுகவின் கட்சி விதிகள் திருத்தப்பட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்களே ஒற்றை ஓட்டின் மூலம் தேர்வு செய்வர் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி அதிமுக உள்கட்சித் தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் இணைந்தே கடந்த 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி பொன்னையன் கடந்த 6.12.2021 அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் ஒசூரை சேர்ந்த அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மட்டுமே தேர்வாக வேண்டும் என்பதற்காக கட்சி விதிகளில் திருததம் செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் தவிர போட்டியிட யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்பு மிக குறுகிய கால இடைவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 21 நாட்களாவது இடைவெளி விட வேண்டும்.

சுமார் 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுக கட்சியில், வாக்காளர் பட்டியலும் வெளியிடவில்லை. மேலும் கட்சியினர் வாக்களிக்க ஒரு நாள் போதாது. மொத்தத்தில் இந்த தேர்தல் அறிவிப்பு என்பதே கபடநாடகமாக உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளராகவும், இணைஒருங்கிணைப்பாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யவே, இதுபோல கட்சி நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.

எனவே இந்தத் தேர்தலில் தடை விதிக்க வேண்டும். இந்த தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற நிர்வாகிகள் பதவிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்க தடை விதிக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வு இன்று (14.12.2021) பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்வானதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் அதிமுக தேர்தலில் தலையிட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.