தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது, மேலும் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தற்போதைக்கு எண்ணம் இல்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார். அங்கு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.21.73 கோடி மதிப்பீட்டில் 13 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். கீழ்பவானி கால்வாயை ரூ.985 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோபிச்செட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.
ஈரோட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும்பணி தொடங்கியுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கூடுதல் மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும் கூறினார்.
கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, எடப்பாடி தனி மாவட்டமாக உதயமாகும் என தகவல்கள் பரவி வந்தன. இதுகுறித்த கேள்விக்கு, தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்றார்.
மேலும் கோவையில் பெரியார் சிலை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிலை அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றார்.
மேலும் வாசிக்க: தமிழகத்தில் தொடரும் பெரியார் அவமதிப்பு சம்பவம்… தலைவர்கள் கடும் கண்டனம்
மின் கட்டண குளறுபடி குறித்த கேள்விக்கு, மின்கட்டண கணக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை என்று கூறினார். மேலும் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தற்போதைக்கு எண்ணம் இல்லை என பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில், கடந்த ஆண்டு தான் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி , திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகியவை மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.