கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் உயிரிழந்துள்ளார்.

இந்தியளவில், கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 48,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 528 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 26,782 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் உட்பட 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனிச்செயலாளர் தாமோதரன் இன்று (17.06.2020) உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஜூன்.19 முதல் 30ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு

இதனையடுத்து அலுவலகத்தில், தனிச்செயலாளர் உடன் இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முதல்வரின் புகைப்படக் கலைஞருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்திலுள்ள பத்திரிக்கையாளர்கள் அறை பூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனிச்செயலாளர் தாமோதரன் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “முதல்வரின் தனிச்செயலாளர் தாமோதரன், கொரோனா காரணமாக இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்களின் பாதுகாப்பை முதல்வர் உறுதி செய்திட வேண்டும். இனி ஒரு முன்களப் பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.