கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் 1995ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெரியார் சிலை அமைந்துள்ளது. பெரியார் இயக்கங்களின் போராட்டங்கள், சிந்தனை நிகழ்வுகள் போன்றவை இங்கு நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இங்குள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் காவிப்பொடி வீசிச் சென்றதாக தகவல் அறிந்த பெரியார் தொண்டர்கள், திராவிட கழகத்தினர் கோவையின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள கருத்தில், “என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில் தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார். எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்” எனக் கூறியுள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி கூறும்போது, “தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்.. மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ள கருத்தில், “தமிழக அரசு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேவலமான இந்தச் செயலில் ஈடுபட்ட வர்களை கண்டுபிடித்துக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன்நிறுத்தி, கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்று மதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட பதிவில், “கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு அவலம்.. அச்சத்தில் மக்கள்