தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24% அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் எனக் கூறி மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு கடந்த 18-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும் என்றும், சட்டமாக இயற்றப்படுமா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் ஆன்லைன் விளையாட்டுகளால் உயிர்கள் பறிபோவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழக அரசின் இந்த அதிரடி முடிவு பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இந்த அவசர சட்டத்தில், தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்- அரவிந்த் கெஜ்ரிவால்