வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் “டேனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ளது. இப்படம் மூலம் வரலட்சுமிக்கு ‘மக்கள் செல்வி’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஹீரோயின் மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும், வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வரலட்சுமியின் 34 ஆவது பிறந்தநாளான நேற்று, அவரது நடிப்பில் உருவாகி வரும் டேனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. எல்.ஜி.சந்தனமூர்த்தி இயக்கும் இப்படத்தை பிஜி மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படம் மூலம் வரலட்சுமிக்கு மக்கள் செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு டுவிட்டரில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தப் பட்டம் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வழங்கப்பட்டது எனவும், தமிழ் சினிமாவில் ஒரேயொரு மக்கள் செல்வி தான். அதுவும், எங்கள் கீர்த்தி சுரேஷ் தான் என்று கூறியுள்ளனர்.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்புத் திறமையை கச்சிதமாக வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ்க்கு அப்போது மக்கள் செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சேவ் சக்தி அமைப்பில் உள்ள 25 உறுப்பினர்கள் வரலட்சுமி பிறந்தநாளை முன்னிட்டு தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும், 10 குழந்தைகளின் கல்விச் செலவை வரலட்சுமி ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.