அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமையை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்க்க தங்கள் தரப்பு பேச்சுவார்தையாளர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்ய, நிலத்தின் உரிமையைக் கோரும் தரப்பினரிடமும் உச்ச நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது.
 
2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம், நிர்மோஹி அக்காரா, சுன்னி மத்திய வக்ஃபு வாரியம், ராம்லல்லா விரஜ்மான் ஆகிய மூன்று தரப்புக்கும் சரிநிகராக பிரித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்ச நீதி மன்றத்தில் 14 மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டன.
 
நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் பேச்சுவார்தையாளர் ஒருவர் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமா என்பது குறித்து இன்று, மார்ச் 6ஆம் தேதி, அறிவிக்கப்படும் என, பிப்ரவரி 26 அன்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
 
இந்தப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான வாய்ப்பு ஒரு சதவிகிதம் இருந்தால்கூட, அதைச் செய்ய வேண்டுமென தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அப்போது கூறியிருந்தது.
 
இந்த ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 
அதன் படி உச்ச நீதிமன்றத்தில் இன்று பேச்சுவார்த்தை மூலம் அயோத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண முடியுமா என்பது குறித்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
 
பேச்சுவார்தையாளர்களின் பெயர்களை பரிந்துரை செய்யுமாறு கூறிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த வழக்குக்கு விரைவில் தீர்வு காணவே விரும்புகிறோம் எனக் கூறினார்.
 
இஸ்லாமியர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தும் ஆலோனைக்கு ஒப்புக்கொண்டாலும், கடந்த காலங்களில் இத்தகைய பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியையே சந்தித்தன எனக்கூறி இந்துக்கள் தரப்பினர் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.
 
இன்றைய விசாரணையின்போது, வாதாடிய இந்து மகாசபை வழக்கறிஞர் எஸ்.கே.ஜெய்ன், பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தால், அதற்கு முன்னர் நீதிமன்றம் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
 
“இது அவர்களுக்கு ஓர் இடப் பிரச்சனையாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு இது உணர்வுகள் தொடர்பானது. இஸ்லாமியர்கள் படையெடுப்பு நடத்தி அழிவை உண்டாக்கினார்கள். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை நம்மால் மாற்ற இயலாது. நிகழ்காலத்தில் நடப்பதையே நாம் முடிவு செய்ய இயலும் ,” என அவர் வாதிட்டார்.
 
அப்போது, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் அங்கம் வகிக்கும் நீதிபதி எஸ்.ஏ.பாப்தே, “இது அறிவு, உள்ளம் மற்றும் உறவுகளை ஆற்றுப்படுத்தல் தொடர்பானது. இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் மற்றும் அது மக்கள் மீது செலுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து நாங்கள் கவனமாக உள்ளோம். எங்களைவிட உங்களுக்கு அதிக மத நம்பிக்கை இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா? இது உணர்வுகள், மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பானது. இந்த பிரச்சனையின் ஆழத்தை நாங்கள் அறிவோம், ” என குறிப்பிட்டார்.
 
நிர்மோஹி அக்காரா தரப்பு வழக்கறிஞர் சுஷில் ஜெய்ன் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 
பிரச்சனைக்குரிய நிலத்தில் வழிபாடு செய்ய தமக்கும் அடிப்படை உரிமை இருப்பதால் தம்மையும் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
 
அவரை விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
 
பிரச்சனைக்கு உரிய நிலம் அரசுக்குச் சொந்தமானது என்றும், பேச்சுவார்த்தை மூலம், தொடர்புடையவர்கள் இழப்பீடு மட்டுமே கோர முடியும் என சுப்பிரமணியன் சாமி நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
 
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அந்த நிலத்தை ராமர் கோயில் கட்ட வழங்க அப்போதைய அரசால் முடிவு செய்யப்பட்டிருந்தது.
 
பேச்சுவார்த்தை நடந்துவரும் சமயங்களில் அது குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட தடை விதிப்பது குறித்து குறிப்பிட்ட நீதிபதிகள், இது ஒரு தடை ஆணை அல்ல என்றாலும் இதுகுறித்த செய்திகளை வெளியிடக் கூடாது என்றும் கூறினர்.