பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் (வயது 79) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருடைய மறைவு தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட பல திரைக்காவியங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரன். சமீபத்தில் விஜய் நடித்த தெறி மற்றும் ரஜினி நடித்த பேட்ட, விஜய்சேதுபதியின் சீதக்காதி, உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் மட்டுமின்றி எழுத்துத்துறையிலும் பணிபுரிந்துள்ளார்.

துக்ளக் பத்திரிகையில் பணியாற்றிய மகேந்திரன், சில நாவல்களையும் எழுதியுள்ளார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் விஜய் நடித்த சச்சின் உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மகேந்திரன் உடலுக்கு இசைஞானி இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார். இயக்குனர் பாரதிராஜா கண்ணீர் மல்க தனது அஞ்சலியை செலுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த், நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இயக்குனர் மகேந்திரன் என்னை எனக்கே அடையாளம் காட்டியவர். எனக்கு நடிப்பில் புதிய பரிணாமத்தை கற்று கொடுத்தவர். தமிழ் சினிமா இருக்கும் வரை அவருக்கு என ஒரு இடம் இருக்கும். எனக்கும் அவருக்கு ரொம்ப ஆழமான நட்பு இருந்தது.

சமீபத்தில் அவரை சந்தித்து சினிமா, அரசியல் உள்பட பல விஷயங்களை மனம்விட்டு பேசினேன் அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அவருடைய குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கூறுகையில், மகேந்திரன் குறைவாகத்தான் பேசுவார். ஆனால் அவருடைய படம் நிறைய பேசும். அவருடைய படங்கள் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷன். உதிரிப்பூக்கள் படம் பார்த்து பல நாட்கள் நான் தூங்காமல் இருந்துள்ளேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன் எனக் கூறினார்.

மேலும், இயக்குனர்கள் பாக்கியராஜ், மணிரத்னம், ஷங்கர், லிங்குசாமி, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் கமல்ஹாசன், மோகன், உதயநிதி ஸ்டாலின், சசிகுமார், நடிகைகள் சுஹாசினி, ராதிகா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்களை நேரில் தெரிவித்தனர்.