திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் சிவகுமார் மீது திருமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி இமெயில் மூலம் ஒருவர் சிவகுமார் பேசிய காணொளியை விஜிலன்ஸ் அதிகாரிக்கு பகிர்ந்திருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமார் பேசியிருந்த அந்த காணொளியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் திருப்பதி கோயில் நிர்வாகத்தை விமர்சித்து சிவகுமார் பேசியதாக கூறப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் மற்றும் இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விஜிலென்ஸ் அதிகாரி சுப்பிரமணியா என்பவர், திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் திருமலை இரண்டாவது நகர போலீசார் நடிகர் சிவகுமாருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க: Godman வெப்சீரிஸ் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய திரௌபதி பட இயக்குனர்

இதேபோல, ஜூன், 30ம் தேதிவரை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை என தவறான பிரச்சாரம் செய்த சில மீடியாக்கள், மற்றும் திருமலை கோவில் இந்து கோயிலாக பின்னர் மாற்றப்பட்டது என்று பிரச்சாரம் செய்த பேஸ்புக் நிர்வாகி உள்ளிட்டோர் மீதும் போலீசில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த ஆண்டு, சிவகுமார் வெளியிட்ட ஒரு வீடியோ விளக்கத்தில், தானும் கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்றும், முருக பக்தன் என்றும் விளக்கம் அளித்திருந்தார். இப்போது திருமலையில், சிவகுமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நடிகர் சிவகுமார், அவரது மகன் சூர்யா மற்றும் குடும்பத்தினர் பற்றியும் அவர்களின் கடவுள், மதம் சம்பந்தமான நம்பிக்கைகள் குறித்து செய்திகள் பல்வேறு வகைகளில் வெளியாகி சர்ச்சை ஆவது குறிப்பிடத்தக்கது.