பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில்  வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வசூலில் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்து வெற்றிபெற்றுள்ளது.
உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இப்படத்தில் மார்வெல் சீரியசில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்கள் மற்றும் தனோஸ் என்ற சக்திவாய்ந்த வில்லன் ஒன்றாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
படம் திரையிட்ட நாளிலிருந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் அதிக வசூல் குவித்த படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இரண்டே வாரத்தில் முறியடித்துள்ளது. மேலும் அவதார் படத்தின் வசூலையும் இந்த படம் முந்தும் என்று சினிமா வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடி வசூலித்துள்ள இந்த படம், ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.