பிரபல நடிகை, நடன இயக்குனர் மற்றும் பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம், கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். இவர் 2002-ம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள காயத்ரி யாதுமாகி நின்றாய் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

காயத்ரி ரகுராம் மீது சர்ச்சைகள் வரும்போது எல்லாம் கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர் கட்சியில் இல்லை என்று விமர்சித்தார். பதிலுக்கு காயத்ரியும் தமிழிசையை விமர்சித்தார். இதுவும் சர்ச்சையானது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களை காயத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தான் அரசியலிலிருந்து விலகுவதாக காயத்ரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “வாக்குவாதம், மற்றவர்களை குற்றம் சொல்லும் அரசியல் இன்று அதிகரித்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ள இன்றைய அரசியலை வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை.

தேர்தலில் மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இங்கு எதுவும் மாறுவது போல் தெரியவில்லை. எனவே எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்துவிட்டது. அரசியலில் விஸ்வாசமாக இருந்தாலும் கடைசியில் நாம் நகைச்சுவைப் பொருளாகிவிடுகிறோம்.

சினிமாவைவிட, அரசியலில் நடிகர்கள் அதிகம். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள் அதிகம் உள்ள அரசியலில் என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது.

ஆனால் அதே நேரத்தில் நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்பு உணர்வுடன் மீண்டும் அரசியலில் ஈடுபடுவேன். அதுவரை அமைதியாக வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தீவிர அரசியலுக்கு இது நேரமில்லை என்று எனக்கு தெரிகிறது. இப்போதைக்கு நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.