விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை மற்றும் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டதற்கு, நடிகர் தீப் சித்து மற்றும் ஆர்வலர் லகா சிதானா மட்டுமே காரணம் என்று விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநில விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாட்டின் 72வது குடியரசு தினமான நேற்று (ஜனவரி 26) காவல்துறையினர் அனுமதி பெற்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தினர்.
ஆனால், விவசாயிகளின் ஒரு பிரிவினர் தங்கள் டிராக்டர்களை பயன்படுத்தி, தடுப்புகளை இடித்து தள்ளி டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்து, அங்கு சீக்கியர்களின் புனிதக் கொடியை ஏற்றிய சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில விவசாயிகள் கையில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவங்களும் அரங்கேறின.
இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் உடனடியாக டெல்லி எல்லைக்குத் திரும்ப வேண்டும் என்றும், இந்த விரும்பத்தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை நாங்கள் கண்டிக்கிறோம், அதற்காக வருந்துகிறோம் என்று விவசாய சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
[su_image_carousel source=”media: 21894,21895″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
மேலும், விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர்கள் போராட்டம் சீர்குலைந்து, அங்கே வன்முறை நிகழக் காரணம், பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்து மற்றும் ஆர்வலர் லகா சிதானா தான் என 62 நாட்களாக கடும் குளிரிலும், பனியிலும் போராடிவரும் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பஞ்சாப்- ஹரியானா நடிகர் தீப் சித்து, நடிகரும் பாஜக எம்.பியுமான பிரபல நடிகர் சன்னி தியோலின் உறவினர். இவர், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரான சன்னி தியோலுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். பிரதமர் மோடி உடன் சன்னி தியோலின் மற்றும் தீப் சித்து எடுத்த புகைப்படங்களும் ஏற்கனவே சர்ச்சையாகின.
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் தீப் சித்துவும் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் தீப் சித்துவின் பங்கேற்பை போராடும் விவசாய சங்கங்கள் கடுமையாக ஆட்சேபித்து வந்தன. பாஜக ஆதரவு நபரான தீப் சித்துவிடம் அனைவரும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தன.
இந்நிலையில் நடிகர் தீப் சித்துவும், லகா சிதானாவும் இரண்டு நாட்களுக்கு முன்பே டெல்லிக்கு வந்து, சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மத்தியில் டெல்லிக்குள் டிராக்டர் ஊர்வலத்தை நடத்தியே தீருவோம் என கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் முழக்கம் எழுப்பி உள்ளனர். இதனை விவசாய சங்கத்தின் பிரதிநிதிகளும் எதிர்த்திருந்தனர்.
இதனிடையே டெல்லிக்குள் டிராக்டர் ஊர்வலம் நடத்தப்பட்டு செங்கோட்டையில் சீக்கியர் கொடியும் ஏற்றப்பட்டது. செங்கோட்டை நிகழ்வுகளில் தீப் சித்துவும் இருந்தார். அவர் தான் தமது கையில் இருந்த சீக்கியர் கொடியை செங்கோட்டை கோபுரத்தில் ஏற்றுமாறு கொடுத்தார். இந்த வீடியோ காட்சிகள் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெல்லி போர்க்களமானதற்கு காரணமே பாஜக ஆதரவாளரான நடிகர் தீப் சித்துதான் என ஊடகங்கள், விவசாய சங்கங்கள் என அனைவருமே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக எம்பி சன்னி தியோல் தமது ட்விட்டர் பதிவில், “தீப் சித்துவுடன் எனக்கோ என் குடும்பத்தினருக்கோ எந்த தொடர்பும் இல்லை. மேலும் டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த நிகழ்வுகள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றி, சீக்கியர்களின் புனித கொடியை ஏற்றியதாக ஆங்கில சேனல்களில் செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், தேசியக் கொடி அகற்றப்பட்டதாக ஆங்கில சேனல்கள் வெளியிட்ட செய்தி தவறு என்றும், அதனை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
உண்மையில், வழக்கமாக தேசியக் கொடி ஏற்றப்படும் கொடிக் கம்பத்தில் தேசிய கொடி கம்பீரமாக பறந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், சிறிய கொடிக் கம்பத்தில் தான் அவர்கள் Nishan Sahib எனும் சீக்கியர்களின் புனித கொடியை ஏற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தினத்தன்று பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தி வரலாறு படைத்த விவசாயிகள்