நெல்லைத் தலைவன் கோட்டையைச் சேர்ந்த 49 பேர் மலேசியாவில் மின்சார டவர் அமைக்கும் பணிக்காகச் சென்றுள்ளனர். அப்படிச் சென்றவர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
 
சமீபத்தில் அவர்களை யாரோ பிடித்து வைத்துள்ளதாகவும் கஷ்டப்படுவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்கள் வேதனையை ஊர் மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
 
இதை தொடர்ந்து நெல்லைக்குச் சென்றிருந்த தி.மு.க எம்.பி கனிமொழியிடம் மலேசியாவில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் என அந்த ஊர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
அதன் பிறகு, மலேசிய அதிகாரிகளிடம் தொடர்புகொண்ட கனிமொழி அவர்களைப் பற்றித் தகவல் கேட்டுள்ளார். அப்போது விசா பிரச்னை காரணமாக 49 பேரை மலேசிய அரசு பிடித்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
 
இதன் பின்னர் எம்.பி கனிமொழி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மூலம் அழுத்தம் கொடுத்து மலேசியாவில் சிக்கிய, நெல்லையைச் சேர்ந்த 49 பேரை மீட்க ஏற்பாடு செய்தார். அவர்கள் அனைவரும் இன்று காலை சென்னை விமானநிலையம் வந்துள்ளனர்.
 
விமான நிலையம் வந்த 49 பேரையும் தமிழக அரசு சார்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று சால்வை போர்த்தி வரவேற்றார்.
 
அப்போது தமிழக அரசின் முயற்சியால்தான் நீங்கள் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த 49 பேரும் ‘நாங்கள் கனிமொழியின் உதவியால்தான் மீட்கப்பட்டோம். உங்களின் சால்வை, வாகனம் எதுவும் வேண்டாம்’ எனக் கூறிவிட்டு தங்கள் ஊர் மக்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் ஏறி நெல்லைக்குப் புறப்பட்டுள்ளனர்.
 
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இது பற்றி மலேசியாவில் சிக்கியவரின் உறவினர் ஒருவர் கூறும் போது, ‘ மலேசிய தமிழ் சங்கத்தினர் மற்றும் கனிமொழி எம்.பியின் உதவியினால்தான் எங்கள் பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
 
இன்று காலை விமானநிலையம் வந்தவர்களை வரவேற்க அரசு தரப்பில் இருந்து அமைச்சர் ஜெயக்குமாரும் அதிகாரிகளும் வந்திருந்தனர். விமானநிலையத்தில் வந்து இறங்கியவர்களை உள்ளேயே வைத்து ‘ நாங்கள் தான் உங்களை மீட்டோம்’ எனக் கூறும் படி அரசு அதிகாரிகள் கூறினர். அதை நாங்கள் நிராகரித்துவிட்டோம்’ எனத் தெரிவித்தார்.