டெல்லி எல்லைப் பகுதிகளான காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு வருவதால், போராட்டம் மிகப் பெரிய அளவில் தீவிரமடைந்து, போராட்டத்தைக் கலைக்க பல இடங்களில் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டு வீச்சும் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 2 மாதங்களாக விவசாயிகள் தொடர் அமைதியாக போராடி வந்தனர். ஆனால் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து போராட்டம் திசை மாறியது.
டெல்லியில் நடந்த டிராக்ட்ர் பேரணியின் போது ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் பேரணியிலிருந்து விலகிச் சென்று செங்கோட்டைக்குள் நுழைந்து தேசியக் கொடிக்கு அருகிலேயே வேறு ஒரு கொடியை ஏற்றிய சம்பவமும், இதையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களும், விவசாயிகளின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதமாக பாஜக ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சி என்பது அம்பலமாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், மத்திய பாஜக அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் ஏற்கனவே போராட்டம் நடத்தி வரும் டெல்லி- உத்தரபிரதேச எல்லை பகுதியான காசிப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்து வருகின்றனர். அங்கு பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத் அங்கு விவசாயிகளுடன் முகாமிட்டு உள்ளார்.
காவல்துறையினர் ராகேஷ் திகைத்திடம் போராட்டத்தை கைவிட்டு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் தனது முடிவில் தெளிவாக இருக்கும் ராகேஷ் திகைத், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின வன்முறை குறித்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரிக்க வேண்டும்.
இந்த இடத்தில் அமைதியாக இருக்கிறோம். ஆனால் இங்கு வன்முறையைத் தூண்டுவதற்கான ஒரு திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. என்ன நடந்தாலும் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளார். இதனால் காசிப்பூர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
[su_image_carousel source=”media: 21975,21976″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
அதேபோல் டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி ஒரு குழுவினர் இன்று விவசாயிகள் போராடும் இடத்திற்கு சென்று, சிங்கு எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தால் எங்கள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுவிட்டது.
அதுமட்டுமல்லாமல், டெல்லியில் குடியரசு தின டிராக்டர் பேரணியில் தேசியக் கொடியை அவமானப்படுத்தியதால் போராட்டக் களத்தைக் காலி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனால் போராடும் விவசாயிகளுக்கும், அந்த குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இதனால் சிங்கு எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதேபோல் திக்ரி எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் அங்கு கையில் தேசியக்கொடி, விவசாய சங்க கொடிகளுடன் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ் மன்யாரி எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் அதிக அளவில் எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லி செங்கோட்டை முற்றுகை; பின்னணியில் பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..