அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்த டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்துள்ளன.
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இதற்கு முதற்கட்டமாக சுமார் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது நிறைவேறாமல் போனது.
இருப்பினும் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக, தற்போது நாட்டில் அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.
நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள 16 மாகாணங்கள், கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. டிரம்பின் அறிவிப்பு சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது எனக்கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.