ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி கடந்த வியாழக்கிழமை (பிப்.14) தாக்குதல் நடத்தி வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்து, சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி வெடிக்க செய்தது மிக பெரிய அதிர்ச்சியை இந்தியா எங்கும் ஏற்ப்படுத்தியது
 
இதில் பேருந்தில் சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
 
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.
 
இதற்கு தக்க நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், செவ்வாய்கிழமை கூறியதாவது:
 
என்னுடைய இந்த விளக்கம் இந்திய அரசுக்கானது. போதிய ஆதாரமின்றி பாகிஸ்தானை குற்றம்சாட்டக்கூடாது.
 
எங்கள் மண்ணில் இருந்து வன்முறை பரவுவதை இங்குள்ள யாரும் விரும்புவதில்லை. புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் குடிமகன் யாராவது காரணம் என்று இந்திய அரசால் நிரூபிக்க முடிந்தால், அப்போது நாங்கள் அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்.
 
இதற்காக இந்திய அரசு எங்களை தாக்க நினைத்தால், நாங்களும் பதிலடி தருவோம் என்பதை மறந்துவிட வேண்டாம். போர் ஏற்படுவது மனிதர்களின் கையில் தான் உள்ளது. ஆனால், அது எங்கு போய் முடியும் என்பது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.
 
இப்பிரச்னைகள் தொடர்பான அனைத்துக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்றார்.