தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தற்போது அமலில் உள்ள பொது முடக்கம் நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்று (டிசம்பர் 01) முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட அனைத்து இளங்கலை இறுதி வகுப்புகள் தொடங்கப்படும்.
மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை வகுப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.
2020- 21 கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி. மேலும் அவர்களுக்கான விடுதிகளும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்படும்.
நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வரும் நாட்களில் நோய்த்தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 14 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.
சுற்றுலாத்தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிப்படும்.
அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50% இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வகையில் சமுதாய அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிசம்பர் 1 முதல் 31 வரை நடத்த அனுமதி. கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.
வரும் நாட்களில் நோய்த்தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.
புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களைத் தவிர்த்து வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இபாஸ் முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான மத்திய அரசால் விதிக்கப்பட்ட தடை தொடரும்.
தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறையின்படி எந்தவிதமான தடங்கலும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியர் தேர்ச்சி முடிவுகளுக்கு இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம்