மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, டிசம்பர் 29 ஆம் தேதி வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 31 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம், சுங்கச் சாவடி முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.2400 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதை தவிர, வேறு திருத்தங்கள் எதுவும் தேவையில்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. டிசம்பம் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஸ்வராஜ் இந்தியா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் உறுதியாக இருப்பதாகவும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
வலுக்கும் விவசாயிகள் போராட்டம்; பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு