டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர்எல்பி) அதிரடியாக வெளியேறி உள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 31வது நாளை கடந்து செல்கிறது. ஆனால் மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கையை மறுத்து வருகிறது.

இந்த வேளாண் சட்டங்கள் எதிர்க்கட்சியினரை மட்டுமின்றி பாஜகவின் கூட்டணி கட்சியினரையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சட்டம் தீர்மான வடிவில் நிறைவேற்றப்பட்டபோதே பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் கூட்டணியில் இருந்து விலகியது.

விவசாயிகள் போராட்டத்திற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவால் கலக்கத்தில் மோடி

அந்த கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் அமைச்சரவையில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர்எல்பி) கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.

அக்கட்சியின் தலைவர் ஹனுமன் பெனிவால் ஜெய்ப்பூரில் தங்களது கட்சி, பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாகவும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹனுமன் பெனிவால் வெளியிட்டுள்ள செய்தியில், “எனது கொரோனா தாக்குதல் காரணமாக என்னால் நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியவில்லை. நான் அவையில் இல்லாத நேரத்தில் இந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் அங்கு இருந்திருந்தால் அவர்களைக் கிழித்து வீசி இருப்பேன்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத பாஜகவுடன் கூட்டணியில் தொடர எங்களுக்கு விருப்பம் இல்லை. எனவே பாஜக கூட்டணியில் இருந்து எங்கள் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி விலகுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விலகி செல்வது, பாஜகவின் ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்க தலையிட வேண்டும்; அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்