ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக வருமான வரித்துறையின் இழப்பீட்டுத் தொகை சுமார் 67.9 கோடி ரூபாயை தமிழக அரசு சென்னை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் 24,322 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. அவரது மறைவுக்குப் பின்னர், அங்கு சசிகலா வசித்து வந்தார். சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இதனிடையே, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடைகோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதா சொத்துக்கு தீபா, தீபக் இருவரையும் 2-ம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.
மேலும் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜெயலலிதா இல்லத்தின் ஒருபகுதியை நினைவு இல்லமாகவும், மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் வாசிக்க: ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக மாற்றுவதில் திடீர் சிக்கல்
இந்நிலையில், நிலம் கையகப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013 ஆகியவற்றின் கீழ், சென்னை நகர சிவில் நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதிகளின் பரிந்துரையின் படி, தமிழ்நாடு அரசு சார்பில், மேலும் 67.9 கோடி ரூபாய் இழப்பீடு கணக்கில் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த இல்லத்திற்கான சட்ட வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ. தீபக் ஆகியோருக்கான இழப்பீடு மற்றும் வரி நிலுவைத் தொகை உட்பட சுமார் 67.9 கோடி ரூபாயை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்று கொள்ளலாம். மேலும் நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதல்வர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை” என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க: தமிழகத்தில் 2 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு; கட்டுப்படுத்த தவறுகிறதா தமிழக அரசு..