ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் மெரினாவில் நினைவிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
 
மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் ₹50 கோடி செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
 
இந்த நினைவிடம் கட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவர் வக்கீல் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, அரசு பணத்தில் நினைவிடம் அமைக்க கூடாது.மேலும், மக்களின் வரிப் பணத்தை, பள்ளிகள், சுகாதார வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முதன்மையான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு நினைவிடம் அமைக்க கூடாது. எனவே, இனிமேல் மெரினாவில் நினைவிடங்கள் கட்ட அனுமதிக்க கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசனின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட 2016 டிசம்பரில் அனுமதி அளிக்கப்பட்டு, 2018 ஜனவரி 10ம் தேதி ₹50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
 
அதற்கான அடிக்கல் மே 7ம் தேதி நாட்டப்பட்டது. அதனால் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவது அரசின் முடிவு அதிகார வரம்புக்கு உட்பட்டதுதான். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
 
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி வாதிடும்போது, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா மீதான சொத்து வழக்கில் குற்றவாளி இல்லை என தீர்ப்பு வழங்கியது.ஒரு வழக்கில் தண்டனையற்றவர் என தீர்ப்பு வெளியாகும் நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும் வரை அவரை குற்றமற்றவர் என்றுதான் கருத முடியும்.
 
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் போதுஜெயலலிதா உயிரோடு இல்லை. அதனால் மனுதாரர் கூறுவது போல ஜெயலலிதாவை குற்றவாளியாக கருத முடியாது என்று வாதிட்டார்.
 
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
 
அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம் 4 பேரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். அதனால், அவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு கைவிடப்பட்டது.
 
எனவே, ஜெயலலிதா மரணம் அடையும்வரை கர்நாடகா உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ததுதான் நிலுவையில் இருந்தது. எனவே, அவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூற முடியாது.
 
மக்களின் வரிப்பணத்தை கொண்டு நினைவிடம் கட்டக்கூடாது என்று மனுதாரர் கோரியுள்ளாரே தவிர, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்க்கவில்லை.
 
எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதேநேரம், கொள்கை முடிவுகள் தலைவர்களின் நினைவாக தரமான மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக இருக்கவேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.