அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் அளித்த விஜய நல்லதம்பி என்பவர் மோசடி வழக்கில் காவல்துறையினரால் இன்று (16.1.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் உட்பட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்களான முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது பணமோசடி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, கடந்த 5 ஆம் தேதி கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படைகாவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் தாண்டி பயணிக்கக்கூடாது. விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் போன்ற நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் விதித்தது.

இதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரது வக்கீல் ஒப்படைத்தார். இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன் வெளியே வந்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் அளித்த விஜய நல்லதம்பி என்பவரை காவல்துறையினர் இன்று (16.1.2022) கைது செய்தனர். சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகத் தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டி பகுதியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலைவாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய நல்லதம்பி கொடுத்த ரூ.3 கோடி மோசடி புகாரில் தான் ராஜேந்திர பாலாஜி கைதாகி சிறை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.