ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இவற்றை மாற்றி ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற புதிய திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இத்திட்டத்தை எதிர்த்தன.
இருப்பினும், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, ஜார்க்கண்ட், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்தன.
இதை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த ஒன்றிய பாஜக அரசால் வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பொருத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை நிறுவுவது,
பயனாளிகளின் ஆதார் எண்களை அவர்களின் குடும்ப அட்டைகளோடு இணைப்பது மற்றும் மாநிலங்கள் உயிரி அடையாளத் தொழில்நுட்ப முறையைக் கொண்டு விற்பனை முனையக் கருவி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ரேஷன் அட்டை இருந்தால் ஒருவர் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். இது நடைமுறைப்படுத்தப்படாததால் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள் எனக் கூறி, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், “அனைத்து மாநிலங்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அமல்படுத்த முன்வர வேண்டும். ஜூலை 31 ஆம் தேதிக்குள் இந்த திட்டம் அமலுக்கு வர வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உணவுப் பொருட்களை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உரிய அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
முறைசாரா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களை பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்கான திட்டத்தை தயாரித்து ஜூலை 31க்குள் வெளியிட வேண்டும். இதற்காக தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் உதவி திட்டத்தை கொரோனா பெருந்தொற்று முடியும் வரை செயல்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!