ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,48,995 கோடியாக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட 28% அதிகம் என்றும், ஜிஎஸ்டி வரலாற்றில் 2வது முறையாக உச்சபட்ச வரி வசூல் என்றும் ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் ரூ.1.49 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு வசூலிக்கப்பட்ட 2வது அதிகபட்ச வருவாய் இதுவாகும்.
கடந்த ஆண்டு இதே ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாயை விட, இந்தாண்டு வருவாய் 28% அதிகம். இதுவரை பதிவு செய்யப்படாத ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் 2022 இல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ஏப்ரலைவிட குறைவு என்றாலும், 2வது அதிகபட்ச வசூலாக இருக்கிறது.
மேலும் தொடர்ந்து 13 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. பொருளாதாரம் மீண்டுவரும் நிலையில், கடந்த 5 மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது.
2022 ஜூலை மாதத்தில் வசூலான ரூ.1.49 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாயில், ஒன்றிய ஜிஎஸ்டி வரி ரூ.25,751 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.32,807 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.79,518 கோடி மற்றும் செஸ் வரியாக ரூ.10,920 கோடி கிடைத்துள்ளது.
ஜூலை மாதத்தில் ஒன்றிய அரசுக்கு ரூ.58,116 கோடியும், மாநிலங்களுக்கு ரூ.59,581 கோடியும் வசூலாகியுள்ளது. மேலும் ஒன்றிய ஜிஎஸ்டிக்கு ரூ.32,3654 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து ரூ.26,774 கோடி மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் மாத சராசரி ரூ.1.51 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட, 22% அதிகமாகும். பொருளாதாரம் படிப்படியாக கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதுதான் ஜிஎஸ்டி வரி உயர்வில் தெரிகிறது. 2022, ஜூன் மாதத்தில் 7.45 கோடி இவே பில் உருவாக்கப்பட்டது. இது கடந்த மே மாதத்தைவிட சற்று அதிகமாகும்.
தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.6302 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 34% அதிகரித்து, ரூ.8,449 கோடி வசூலாகியுள்ளது என்று ஒன்றிய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.