பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள், பிட்காயினுக்கு ஆதரவாக கருத்து ஒன்றையும் வெளியிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக மோடியின் டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டு பதிவும் நீக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டிவிட்டரில் @narendramodi என்ற கணக்கில் செயல்பட்டு வருகிறார். இதில் அரசுத் திட்டங்கள் உட்பட பல்வேறு செய்திகள் குறித்து தினந்தோறும் பதிவிட்டு வருகிறார். இதில் பல மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (12.12.2021) அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது. அவரது பக்கத்தில், இந்தியாவில் பிட்காயினை அதிகாரபூர்வ நாணயமாக அறிவித்துவிட்டதாக பதிவிடப்பட்டது.

டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை கண்டறிந்த பிரதமர் அலுவலக அதிகாரிகள், உடனடியாக இதுகுறித்து டிவிட்டர் நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்திலேயே ட்விட்டர் கணக்கை மீட்டெடுத்து அந்த பதிவுகளை டெலிட் செய்தனர்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. மேலும் பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக ஹேக்கர்கள் குறிப்பிட்டு இருந்தனர்

உடனே இது குறித்து டிவிட்டர் நிறுவனத்துக்குத் தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கணக்கு மீட்கப்பட்டது. பிட்காயின் தொடர்பாக வெளியான பதிவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பிரதமரின் பதிவை தங்களது சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய தொடங்கினர்.

இந்தியாவில் பிட்காயின் முறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு மசோதா ஒன்றைக் கொண்டுவர உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் ஒரு சில பிட்காயின்கள் மட்டுமே இந்தியாவில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பிட்காயின் சட்டப்பூர்வமாக்குவதாகப் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்து கருத்து பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.