மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஒரு வருடத்துக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 1ஆம் தேதி வரை அம்மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து சேவைகள் தொடங்கிவிட்டன. இருப்பினும் மெட்ரோ ரயில் சேவை, ஜிம், மால்கள் போன்ற சிலவற்றிக்கு தடைகள் நீக்கப்படவில்லை.
மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதோடு மக்களுக்காக பல இலவச திட்டங்களை அறிவித்துள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
இந்நிலையில், மம்தா பானர்ஜி, இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், மேற்கு வங்க மாநிலத்தில் ஏழை, எளியோருக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் இலவச ரேஷன் பொருள்கள், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை தொடர்ந்து அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக இன்று (ஜூன் 30) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஏழை, எளிய மக்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் நவம்பர் மாதம் வரை, இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். மோடியின் இந்த அறிவிப்பை வீழ்த்தும் விதமாக மம்தா பானர்ஜி அறிவிப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் வாசிக்க: பொதுமுடக்கத்தால் ஏழைகள் ஒருவர் கூட பசியால் வாடக்கூடாது; பிரதமர் மோடி