இஸ்லாமியர்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம் என்று உத்தர பிரதேசம் மாநிலம் பர்ஹஜ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் திவாரி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. இதுவரை 1986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 357 பேர் மட்டுமே குணமாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், பாஜக,வினர் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று வதந்திகளையும், பாசிசத்தையும் பரப்பி வருகின்றனர்.

முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும், ஆர்.எஸ்.எஸ் சித்தந்தத்தை பின்பற்றும் சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையானது. இதனால் அந்நாட்டு அரசு, மத ரீதியாக புண்படுத்துபவர்களுக்கு விசா ரத்து செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்தது.

மேலும் வாசிக்க: ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பரப்பினால் விசா ரத்து, கைது- எச்சரிக்கப்படும் இந்திய வெளிநாட்டவர்கள்

அதன் விளைவாக வைரஸ் இனம், மதம், சாதி எதையும் பார்க்காது. நாம் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுடன் பொறுப்பாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேச மாநிலம், பாஜக எம்.எல்.ஏ.சுரேஷ் திவாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், ”முஸ்லிம்களிடம் இருந்து யாரும் காய்கறிகள் வாங்கக் கூடாது. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளிடமும், மக்களிடமும் கூறிக் கொண்டுள்ளார்”. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஊடகத்தினர் சுரேஷ் திவாரியிடம் விசாரித்த போது, “இஸ்லாமியர்கள் தாங்கள் விற்கும் காய்கறிகளில் தங்களது உமிழ்நீரை தடவி கொரோனா வைரஸை பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் படியே அவ்வாறு கூறினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு தனி வார்டும், இந்துக்களுக்கு தனி வார்டும் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.அதேபோல், டெல்லியில் காய்கறி விற்றுக் கொண்டு இருந்த இஸ்லாமியர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையானது.

மேலும் வாசிக்க: கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டு சர்ச்சை- குஜராத் முதல்வரின் மன்னிப்பு கோருகிறது மெடிகோஸ்

மீரட்டில் இருக்கும் வேலன்டிஸ் புற்று நோய் மருத்துவமனையும், கொரோனா இல்லாத முஸ்லிம்கள் மட்டும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவர், என்று அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பாஜகவினர் தொடர்ந்து இதுபோன்று சர்ச்சையை ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.