சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால், 48 லட்ச ரூபாய் வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சசிகலா கடந்த 1994-95 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கலில், 28 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய்க்குக் கணக்கு தாக்கல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், சசிகலா அதே நிதியாண்டில் 80 ஏக்கர் நிலத்தை வாங்கி, கணக்கில் காட்டாமல் மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சசிகலா சொத்து சேர்த்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 2008 ஆம் ஆண்டு வருமான வரித்துறைக்கு பட்டியல் அனுப்பி வைத்தது. அதன் அடிப்படையில் 1994 – 1995 ஆம் நிதியாண்டில் 20க்கும் மேற்பட்ட சொத்துகள் தொடர்பான வருமானத்திற்கான வரியாக 48 லட்சம் ரூபாயை செலுத்த 2002 ஆம் ஆண்டு சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது.
ஆனால், சசிகலா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், வருமான வரித்துறையின் இந்த உத்தரவை ரத்து செய்தது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், கடந்த ஆண்டு சசிகலா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒன்றிய அரசின் நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையில்,
ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு கீழ் உள்ள வருமான வரி பாக்கி அல்லது அபராதம் தொடர்பான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தனக்கு எதிரான வழக்கையும் திரும்பப் பெற வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சத்திக்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளனர் எனவே அவருக்கு அபராதத்தை கைவிடும் சுற்றறிக்கை இவருக்கு பொருந்தாது என்றும் தெரிவித்தார்.
இதற்கு சசிகலா தரப்பில் சுற்றறிக்கை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. சசிகலா தரப்பு விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வருமான வரி மற்றும் அபராதம் தொடர்பான வழக்குகளைக் கைவிடும் முடிவின் அடிப்படையில், நடிகர் ரஜினிகாந்த், 2002 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என கூறி, 66 லட்சத்து 22 ஆயிரத்து 436 ரூபாய் வரியை செலுத்தும்படி பிறப்பித்த நோட்டீஸை, 2020 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம் வருமான வரித்துறை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாடத்திட்டத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்.. சர்ச்சையில் டெல்லி பல்கலைக்கழகம்