தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் தான் கே.டி.ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய பாலியல் வீடியோவை, தான் வெளியிட்டதாக யூடியூபர் மதன் தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை மதன் ரவிச்சந்திரன் என்ற யூடியூபர் தனது மதன் டைரி என்ற சேனலில் வெளியிட்டார்.

மேலும் பாஜகவில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதை அம்பலப்படுத்துவதற்காகத் தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக மதன் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததையடுத்து, கே.டி.ராகவன் தனது மாநில பொது செயலாளர் பதவியை விட்டு விலகினார். இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கட்சி அளவில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார்.

அதில், தன்னை சந்தித்த மதனிடம் வீடியோக்களை காண்பித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிய பிறகும் மதன் அவற்றை வெளியிட்டுவிட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை மதன் ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் வெண்பா என்ற பெண் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக தமிழக மேலிடம் அறிக்கை வெளியிட்டது.

https://www.facebook.com/Specialcorrespo/videos/548904929761256/

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட மதன் ரவிச்சந்திரன். கே.டி.ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய பாலியல் வீடியோவை அண்ணாமலையின் ஒப்புதலுடனேயே வெளியிட்டதாகவும்,

அதற்கு ஆதாரமாக தானும் அண்ணாமலையும் பேசியதாகக் கூறும் ஆடியோ பதிவுகளையும் தனது சமூக வலைத்தளங்களில் மதன் வெளியிட்டுள்ளார். மேலும், பல பெண்களின் பெரிய பிரச்சனைகளுக்கு அண்ணாமலை காரணமாக இருக்கப்போகிறார்.

கே.டி.ராகவனின் வீடியோவை அண்ணாமலை தான் வெளியிட சொன்னார் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதை அவர் மறுத்தால் வீடியோவும் வெளியிடப்படும் என்றும் மதன் தெரிவித்துள்ளார். கே.டி.ராகவன் மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருவது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் சர்ச்சையால் பதவி விலகிய பாஜக கே.டி.ராகவன்; கைது செய்யக்கோரி பெண் எம்.பி. புகார்