வனத்துறையினரின் 21 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, மசினகுடி வனப்பகுதியில் சுற்றி திரிந்த ஆட்கொல்லி டி23 புலி இன்று (15.10.2021) மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரிந்த டி23 புலி அடுத்தடுத்து 4 மனிதர்கள் மற்றும் 30-க்கும் அதிகமான கால்நடைகளை அடித்து கொன்றுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதனிடையே, புலியை சுட்டுப்பிடிக்க தடைக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புலியை சுடக் கூடாது என உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டி23 புலி என அடையாளம் காணப்பட்ட அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டன.

இதற்காக வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. மரங்களில் பரண் அமைத்து அதில் இருந்தவாறு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மசினகுடி வனப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட வனத்துறையினர் நேற்று இரவு புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். மசினகுடி – முதுமலை சாலையில் புலி நடந்து சென்றபோது கால்நடை மருத்துவக் குழு நான்கு முறை மயக்க ஊசியை செலுத்தியது.

அதில், இரண்டு ஊசிகள் புலி உடம்பில் சென்று சேர்ந்தது. ஆனால் புலி வனப்பகுதிக்குள் அரை மயக்க நிலையில் தப்பி ஓடியது. மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்வாக காணப்படும் என்பதால் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில், மசினகுடி வன சோதனை சாவடி அருகே சாலையை புலி கடந்து சென்றது உறுதி செய்யப்பட்டது. எனவே அங்குள்ள வனப் பகுதிக்குள் வனத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று (15.10.2021) மதியம் மசினகுடி அருகே, மயக்க ஊசி செலுத்தப்பட்டு புலி பிடிக்கப்பட்டது.

புலிக்கு உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அந்த புலி வண்டலூர் பூங்காவில் விடப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் வனத்துறையினரும், பொது மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். முதல் முறையாக இந்த வனப் பகுதியில் ஆட்கொல்லி புலி உயிரோடு பிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வனப் பகுதியில் இதற்கு முன்பு இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டபோது, 3 புலிகள் சுட்டு தான் பிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறும்போது, ”நீலகிரி மாவட்டத்தில் 3 ஆட்கொல்லிப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. நான்காவதாக டி 23 புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என மக்கள் போராடினர். இந்நிலையில், புலியை சுடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால், புலியை உயிருடன் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் பேரில் முதன்முறையாக ஒரு புலி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் புலிகளைப் பிடிக்க பயிற்சி பெற்ற வனத்துறை, கர்நாடக வனத்துறையினர் உட்பட 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மிகுந்த சிரத்தையுடன் பணியாற்றி இதைச் சாத்தியப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள். புலியை வண்டலூரில் வைத்துப் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.