சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், குவாரி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.விஜயாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியது, அனுமதி அளித்தது, கொரோனா பரவல் தடுப்புக்காக மருத்துவ உபகரணங்கள் வங்கியதில் பல்வேறு மோசடி நடந்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.
மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக விஜயாஸ்கர் அமைச்சராக இருந்த கடந்த அதிமுக ஆட்சியின்போது, ஒன்றிய புலனாய்வு பிரிவினர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், கல்குவாரிகளில் சோதனை நடத்தினர்.
அதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதோடு, கல்குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைவிட பலநூறு மடங்கு அதிகமாக கல் வெட்டி எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
அதன் அடிப்படையிலும், சட்டப்பேரவைத் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட விஜயபாஸ்கர், மனைவி ரம்யா, மகள்கள் பெயரிலான அசையும், அசையா சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்கள் அடிப்படையிலும், அமைச்சராக இருந்த காலத்தில் மனைவி, மகள்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீதான வழக்குகளின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல்குவாரி, இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான மேட்டுசாலையில் உள்ள கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் இன்று (18.10.2021) அதிகாலையில் இருந்து அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.
இதேபோன்று, புதுக்கோட்டை, ஆலங்குடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சரின் நெருங்கிய கட்சி பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், கல்வியாளர்கள் வீடுகள் என மாவட்டத்தில் 23-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இவை உட்பட தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி சோதனையை கண்டித்து, இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டனர். சோதனைக்கு இடயூறாக இருப்பதாகக் கூறி அவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இதனால், காவல்துறையினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.