ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, 5 ஆண்டுகளாக என் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்திருக்கிறேன். அதிமுகவை ஜெயலலிதா, எம்ஜிஆர் காப்பாற்றுவார்கள் எனக் கூறியுள்ளார்.

சசிகலா இன்று (16.10.2021) காலை மெரினாவிற்குச் சென்று ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சசிகலா, “கடந்த 5 ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்திருக்கிறேன்.

ஜெயல‌லிதா நினைவிடத்திற்கு ஏன் தாமதமாக வந்தேன் என்று அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர், ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர். இருவரும் அதிமுகவை காப்பாற்றுவார்கள்”’ என்றார்.

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா சென்று இருப்பதை யாரும் வரலாற்று நிகழ்வாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகிறார்கள். இன்று சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு போய் இருப்பதையும் அது போன்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

லட்சக்கணக்கில் சென்றவர்களில் இவரும் ஒருவர் என்று தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர் எவ்வளவு தான் பில்டப் கொடுத்தாலும் அது செயற்கையாக தான் இருக்கும். இயற்கையாக இருக்காது. இதில் பெரிய விசே‌ஷம் எதுவும் கிடையாது.

ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா சென்றது பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் நினைப்பது எதுவும் நடக்காது. அதிமுக யானை பலம் கொண்டது. அதன் மீது ஒரு கொசு போய் உட்கார்ந்து கொண்டு நான் தான் யானையை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அதை நகைச் சுவையாக தான் எல்லோரும் பார்ப்பார்கள்.

மேலும் அதிமுக கட்சி கொடியை சசிகலா பயன்படுத்த உரிமை கிடையாது. அதை அவர் மீறி வருகிறார். இதற்கு நாங்கள் பலமுறை கண்டனம் தெரிவித்து விட்டோம். வேண்டும் என்றே கட்சி கொடியை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதை நாங்கள் தடுக்க முடியும். ஆனால் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

அதை நாங்கள் தடுத்தால் சசிகலா பெரிய தலைவர் போன்ற மாயை உருவாகும். ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா சென்று இருப்பதை யாரும் வரலாற்று நிகழ்வாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவரை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

இதுபோன்று சசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம். அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடம் இல்லை. டி.டி.வி.தினகரன் வேண்டுமானால் அவருக்கு அமமுகவில் நல்ல இடம் கொடுக்கலாம்” என்று விமர்சித்துள்ளார்.