தன்னை குறித்து அவதூறு பரப்பிவரும் யூடியூப் சேனல்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சரத்குமார் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சரத்குமார். அதன்பிறகு அரசியலில் கவனம் செலுத்தினார். சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். தென்காசி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்.
தற்போது சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருக்கும் சரத்குமார் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அரசியல் மற்றும் நடிப்பை தாண்டி சமீபகாலமாக சரத்குமாரை சர்ச்சைகள் சூழ்ந்து வந்தன.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் சிலர் தற்கொலை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் ரம்மி தடைக்கான மசோதா ஆளுநர் ஆர்என் ரவிக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து இருந்தார்.
தொடர்ந்து பலபேர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்த நிலையில், விளம்பரத்தில் நடித்த சரத்குமாரை பலரும் விமர்சனம் செய்தனர். இதற்கு சரத்குமார் விளக்கமும் அளித்தார். ஆன்லைன் ரம்மிக்கு அரசு தடை விதித்து இருந்தால் நான் நடித்திருக்கவே மாட்டேன் என்று சரத்குமார் கூறினார்.
அதேபோல் நடிகர் விஜய்யின் தந்தையாக பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தில் சரத்குமார் நடித்திருந்தார். இந்த படத்தில் பாடல் வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசினார். அப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று அவர் கூறியிருந்தார். இது விவாதத்தை கிளப்பியது. இவ்வாறாக சமீபத்தில் நடிகர் சரத்குமார் பேசும் பொருளாகி உள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது நடிகர் சரத்குமார் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில், தன்னை பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் தொடர்ந்து அவதூறான கருத்துகளை வெளியிட்டு வரும் யூடியூப் சேனல்களின் பெயர்களை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணையை துவங்க உள்ளனர்.