பாலிவுட்டில் ஒரு கேங் தனக்கு எதிராக இயங்குகிறது என ஏ.ஆர்.ரஹ்மான் குற்றம் சாட்டியதற்கு, ‘வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை’ என கருத்து தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வென்ற பிறகு சர்வதேச அளவில் புகழ் பெற்று சில ஹாலிவுட் பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது நேரடியாக ஓடிடி தளத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான ‘தில் பெச்சாரா’ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சுஷாந்த் சிங்கின் ‘தில் பெச்சாரா’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இதில் ஒன்பது பாடல்களை இயற்றியிருந்தார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில், பாலிவுட் திரைப்படங்களுக்கு ஏன் அதிக இசையமைக்கவில்லை என்று கேட்கப்பட்டதற்கு, நான் நல்ல திரைப்படங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் பாலிவுட்டில் ஒரு கேங் தனக்கு எதிராக இயங்குகிறது என வெளிப்படையாக கூறியிருந்தது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு பிறகு பாலிவுட்டில் வாரிசு கலாச்சாரம் மற்றும் கேங் சேர்ந்திருப்பது போன்றவற்றை பற்றி விமர்சனங்கள் அதிகரித்தது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி கூறியிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், “வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை” என ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம். ஆனால், நேரத்தை மட்டும் மீட்க முடியாது. செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன. அமைதியாக கடந்து செல்வோம் என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: ‘மெடிக்கல் எமர்ஜென்சி’ என பொய் கூறி வாக்கிங் செல்ல இ-பாஸ் பெற்றாரா ரஜினிகாந்த்…