செங்கல்பட்டு HLL Biotech நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்து உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தடுப்பூசி மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாக உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் தற்போது மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியா மற்ற நாடுகளை போல் அல்லாமல், பெரிய அளவில் தடுப்பூசிகளை முன்கூட்டியே ஆர்டர் செய்யவில்லை.
மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகளையும் பாஜக மோடி அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இதனால் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கொடுப்பதில் இந்தியா மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்த அலட்சியத்தால், மாநில அரசுகளே தங்கள் மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற சர்வதேச ஒப்பந்தம் கோரி உள்ளன.
தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் சர்வதேச அளவில் தடுப்பூசி இறக்குமதிக்கான ஒப்பந்தம் கோரி உள்ளன. இதில் மாடர்னா, பைசர் போன்ற நிறுவனங்கள் டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி கொடுக்க முடியாது, மாறாக மத்திய அரசுடன் மட்டுமே தடுப்பூசி விற்பனையை மேற்கொள்வோம் என்று கூறிவிட்டது.
மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்க முடியாது: மாடர்னா & பைசர்
அதிலும் மாடர்னாவிடம் இந்த வருட இறுதி வரை விற்பனை செய்ய டோஸ் இல்லை என்று கூறிவிட்டது. இதனால் தமிழக அரசு அமெரிக்காவில் உள்ள ஜான்சனன் ஜான்சன், ஸ்புட்னிக் வி, சீனாவின் சினோவேக்ஸ் போன்ற மற்ற வேக்சின்களை மட்டுமே நம்பி உள்ளது.
இதற்கிடையே தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தீவிரமான மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து போதிய அளவு தடுப்பூசி கிடைக்காத நிலையில், புதிய திட்டங்களில் தமிழக அரசு களமிறங்கி உள்ளது. இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தியை மேற்கொள்ளுங்கள் என்று பெருநிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் அரசால் 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த HLL Biotech தடுப்பூசி உற்பத்தி ஆய்வகம், கிட்டத்தட்ட 9 வருடமாக இயங்கவே இல்லை. ஒன்றிய பாஜக அரசு நினைத்திருந்தால், தமிழகத்திலேயே பல மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்திருக்க முடியும். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (மே 26) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் HLL Biotech நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை ஆய்வு செய்தார்.
[su_image_carousel source=”media: 23575,23576″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும். மேலும், HLL Biotech நிறுவனத்திற்கு உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், HLL Biotech நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் விஜயன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
‘அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது’- சர்ச்சையால் கருத்தை திரும்பப்பெற்ற பாபா ராம்தேவ்