நீட் தேர்வை விமர்சித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி, அதன் பயன்பாடுகளைச் சுட்டிக்காட்ட தவறிவிட்டது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்பு பயிற்சி முறை (கோச்சிங்) மாணவர்கள் மத்தியில் கற்றலை முழுவதுமாக மாற்றிவிட்டது என்று நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை பொறுத்தவரை இது உண்மைதான். ஆனால், நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் வருவதற்கு முன்பாகவே பள்ளிகளில் சிறப்பு பயிற்சி முறை இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பயிற்சி முறை சார்ந்த தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

நீட் தேர்வை விமர்சித்துள்ள அந்த கமிட்டி, அத்தேர்வின் பயன்பாடுகளை சுட்டிக்காட்ட தவறிவிட்டது. வெவ்வேறு மருத்துவ கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்பட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நீட் தேர்வு அகற்றியுள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டு இந்தியாவில் உள்ள எந்த மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் சேரலாம். மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க நீட் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை வழங்குகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 85% (அகில இந்திய ஒதுக்கீடு 15% நீங்கலாக) இடங்கள் தொடர்ந்து தமிழக மாணவர்களுக்கும்தான் கிடைக்கும். நீட் மதிப்பெண் மூலம் மத்திய நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர மாநிலங்களில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேர முடியும். வெளிநாடுகளிலும் சேர்க்கை பெறலாம்.

வெவ்வேறு பாடத்திட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமவாய்ப்பு கிடைக்க பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என பரிந்துரை மிகவும் வியப்பாக இருக்கிறது.

பொது நுழைவுத்தேர்வு நடத்தினால்தான் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைக்கும். ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை அடிப்படையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றியிருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது என்று கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.