நில மோசடி புகாரில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் வீட்டில் நடந்த சோதனையையொட்டி அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது.
மும்பையின் கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனம், குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத்துறை முன் சஞ்சய் ராவத் நேரில் ஆஜரானார். இந்த வழக்கு குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
மீண்டும் ஜூலை 20 ஆம் தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியும் அந்த தேதியில் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. பிறகு 27 ஆம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்கு பின் ஆஜராவதாக சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (31.07.2022) காலை முதல் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறையினர் 9 மணி நேரம் சோதனை நடத்தினர். நிலமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த சோதனையைத் தொடர்ந்து சஞ்சய் ராவத் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் ரவுத் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு எந்த ஊழலிலும் தொடர்பு இல்லை. நான் இதை சிவசேனா தலைவர் பால் தாக்கரே மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நான் சிவசேனாவுக்காக தொடர்ந்து போராடுவேன். என் உயிர் போகும் நிலை வந்தாலும் கூட கட்சியை விட்டு நீங்க மாட்டேன். ஜெய் மகாராஷ்டிரா” என்று பதிவிட்டுள்ளார்.