தமிழக காவல் துறைக்கு கவுரவமிக்க குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி வழங்கப்பட்டதன் மூலம், தென் மாநிலங்களில் இந்த கொடியை பெறும் முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.

தமிழக காவல்துறையின் பெருமையை கவுரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் சிறப்பு வண்ணக்கொடியை வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று (31.07.2022) நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் வண்ணக்கொடியை வெங்கையா நாயுடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பின்னர் அக்கொடியை பெற்றுக்கொண்ட சைலேந்திரபாபு கம்பீரமாக அதை ஏந்தி சென்றார்.

தென்மாநிலங்களில் இந்த வண்ணக்கொடியை பெறும் முதல் மாநிலம் தமிழ்நாடு. இந்த சிறப்பு கொடி நாட்டில் இதுவரை பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் உள்பட 10 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் காவல்துறை 1856 ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னோடி காவல்துறை என்று பெயர் பெற்ற தமிழக காவல் துறையில் தான் முதன் முதலில் கைேரகை பிரிவு, தடயவியல் பிரிவு, வயர்லெஸ் பிரிவு, கடலோர காவல் படை ஆகியவை தொடங்கப்பட்டன.

இத்தகைய சிறப்புக்களை கொண்ட காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்க கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதே கோரிக்கை வைத்தார். தமிழக காவல் துறையின் 150-வது ஆண்டையொட்டி 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே கொடி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையின் சின்னத்தை பொருத்தி இந்த சிறப்பு பட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொடியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்துடன் வாய்மையே வெல்லும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

கவுரவம் மிக்க இந்த பட்டையை சாதாரண காவலர்கள் முதல் டி.ஜி.பி. வரை காவல் துறையில் பணிபுரியும் 1 லட்சத்து 32 ஆயிரம் தங்கள் சீருடையின் வலது தோள்பட்டையில் அணிந்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.