கொரோனா பரவலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்றின் 2வது அலை மார்ச் மாதத்தில் மீண்டும் வேகமெடுத்து, கடந்த 2 மாதமாக பாதிப்பு கடுமையாக உள்ளது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (1-6-2021) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதென முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், “மாணவர்களின் உடல்நிலை, பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்த பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது.
இத்தகைய மன அழுத்த சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு வருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. அனைவரும் மாணவர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும். எனவே மாணவர்கள் நலன்கருதி சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது” என்று அறிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களுக்கான மதிப்பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வழிமுறையில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி- பள்ளிக் கல்வித்துறை