கொரோனா காலகட்டத்தில் காவல்துறை மக்களிடம் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாத்தான்குளம் பென்னிக்ஸ் அவரது தந்தை இருவரும் போலீஸ் விசாரணையின் போது கோவில்பட்டி சிறையில் சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி இருவரும் காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்தனர். விசாரணையில் காவல்துறைத் தலைவர் முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதால், தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் ஆஜராயினர்.

மேலும் வாசிக்க: விஸ்வரூபமெடுக்கும் சாத்தான்குளம் பென்னிக்ஸ் மரணம்; டிஜிபி, எஸ்பி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

காவல் துறை துணைத் தலைவர், இது தொடர்பாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமைக் காவலர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நீதிபதிகளிடம் கூறினார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முழுமையான விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.

அதன்பின் நீதிபதிகள் கூறியதாவது, நீதிமன்றம் இந்த வழக்கை கவனமாக கையாண்டுவருகிறது. நீதிமன்ற நடுவரின் விசாரணையில் எந்தவித குறுக்கீடும் இருக்க கூடாது என்றும் பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

மேலும் சாத்தான்குளம் சம்பவம்போல் தமிழகத்தில் இனி நடக்காமல் இருக்க காவல்துறை தலைவர் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூன்.26 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை முடிந்து அடக்கம் செய்யும் போது கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றவேண்டும் என தெரிவித்து, வழக்கு விசாரணையை ஜுன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.