சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் உலகம் முழுக்க வெளியானது. விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் மெர்சல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் ஐஏஆர்ஏ (IARA) விருதுக்கு விஜய்யின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். சிறந்த நடிகர் பிரிவில் விஜய்யுடன், டேவிட் டென்னன்ட் (டான் ஜுவான் இன் சோஹோ), ஜான் பொயேகா (ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி), கிறிஸ் அட்டோ (ஸ்விங்), ஜாக் பெர்ரி ஜோன்ஸ் (பாங்), டேனியல் கலுயா (கெட் அவுட்), ஜாக் மோரிஸ் (ஈன்ஸ்ட்என்டர்ஸ்), ஜேமி லோமாஸ் (ஹோலிஓக்ஸ்) ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டது. இதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

மெர்சல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐஏஆர்ஏ (IARA) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு அவரை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளது.

சர்வதேச அளவில் விஜய்க்கு கிடைத்துள்ள கவுரவத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் மற்றும் பிற நடிகர்களின் ரசிகர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரே தமிழ் நடிகர் விஜய் தான். பரிந்துரை செய்யப்பட்ட பெருமையுடன் விருதை வென்று தமிழர்களை பெருமை அடைய வைத்துள்ளார்.

இதனையடுத்து, சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய்க்கு நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக “சிறந்த சர்வதேச நடிகர்” என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’” எனக் குறிப்பிட்டிருந்தார்.