விஜய் நடித்து வெளிவந்த கத்தி படம் திருட்டு கதை என்று சர்ச்சைகள் வந்தன. அதேபோல் சர்கார் படமும் பிரச்சினையில் சிக்கி உள்ளது. இந்த படத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். தீபாவளிக்கு சர்கார் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படம் தான் எழுதிய செங்கோல் கதை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும் வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையையும் தற்கால அரசியலையும் கருவாக வைத்து இந்த படத்தை எடுத்து இருப்பதாக ஏ.ஆர். முருகதாஸ் தெளிவுபடுத்தி உள்ளார். கோபுரங்கள் சாய்வதில்லை படமும் பாக்யராஜ் இயக்கிய சின்னவீடு படமும் ஒரே மாதிரி இருப்பதாக கூறப்பட்டது. எனவே சின்ன வீடு படம் திருட்டுக்கதையா? என்றும் கேள்வி விடுத்தார்.
சர்கார் படம் மீதான வழக்கு விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடக்க உள்ள நிலையில் தீர்ப்பு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இன்று விசாரணையில் சர்கார் பட கதை உரிமை தொடர்பாக கதையாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் தகவல் தெரிவிக்கபட்டது.
மேலும் திரைப்படத்தின் துவக்கத்தில் கதை ‘நன்றி’ என குறிப்பிட்டு வருண் ராஜேந்திரன் பெயரை வெளியிடவும் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் சமரசத்திற்கு ரூ.30 லட்சம் வருண் கேட்ட நிலையில் அதை தருவதாகவும் முருகதாஸ் ஒத்துக்கொண்டுள்ளார். கதையை திருடவில்லை என்று ஏ ஆர் முருகதாஸ் கூறி வந்த நிலையில் திடீரென சமரசத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதைத்தொடர்ந்து உதவி இயக்குனர் வருன் ராஜேந்திரன் தொடர்ந்த சர்கார் பட வழக்கை வாபஸ் பெற்றார்.
கதைக்கு உரிமை கோரிய ராஜேந்திரன் என்கிற வருணுடன் சமரசம் ஏற்பட்டதற்கான மனுவை முருகதாஸ், படத்தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். சர்கார் பட பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக வருண் ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார். மேலும் பட டைட்டிலில் நன்றி என எனது பெய்ரை வெளியிட முருகதாஸ் ஒப்புகொண்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
சர்க்கார் படத்திற்கு தடை கேட்டு வருண் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு சற்று நேரத்திற்கு ஒத்திவைத்தார் நீதிபதி சுந்தர். படத்தின் டைட்டில் கார்டில் கதைக்கு நன்றி என வருண் ராஜேந்திரனின் பெயரை போடுவதற்கு ஒப்புக்கொண்டதால் சமரசம் ஏற்பட்டது. சமரசத்தை ஏற்று வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் சர்கார் படம் வெளியாவதில் தடையில்லை.