கேரள மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பம்பா உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சேதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நவம்பர் மாதம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கவும் கேரள காவல்துறை மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பம்பா பகுதியின் கட்டுமானத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மாநிலக் காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா, கேரள முதல்வர் பிணராய் விஜயனுடன் கலந்தாலோசித்தார். அப்போது அவர், நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்கக் கோரியும், காவல் துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிமுகப்படுத்தி இருக்கும் “விர்ச்சுவல் கியூ” மூலமாகப் பக்தர்களின் பதிவைக் கணக்கிடவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மென்பொருளை அதிகப்படியான பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கும் பணி மேம்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை ஆன்லைன் புக்கிங் செய்யும் இணையதளம் மீண்டும் செப்டம்பர் முதல் வாரத்தில் புதுப்பிக்க உள்ளது. இதனால், ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு இது வசதியாக இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், ஆன்லைன் விர்ச்சுவல் கியூ மூலம் பதிவு செய்யாதவர்கள், ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது. அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.