சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி ஜெயலலிதா 1வது குற்றவாளியாகவும், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாகவும் அறிவித்து உத்தரவிட்டது.

சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனைக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்பாகவே அவர் வெளிவருவதற்கான பணிகளை அவரது தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியது வருமான வரித்துறை.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும்போது அவர் தங்குவதற்காக போயஸ் கார்டனில் 24,000 சதுரடியில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்துக்கு எதிராக கட்டப்பட்டு வரும் பங்களாவும், அது தவிர சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆலந்தூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்பத்தூர் பகுதிகளில் பினாமிகள் பெயர்களில் ரூ.300 கோடி மதிப்பில் 65 சொத்துகள் 200 ஏக்கரில் பல கோடிகளில் சொத்துகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

மேலும் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் சொத்து முடக்கியது தொடர்பாக கர்நாடக சிறையில் உள்ள சசிகலாவுக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் புதிதாக கட்டி வரும் வீடு உட்பட முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியது. வீட்டில் சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீஸை வருமான வரித்துறை ஒட்டியது.

முன்னதாக, போயஸ் கார்டன் வீடு, சசிகலாவுக்கு சொந்தமான இடம் என பல இடங்களில் 2017 நவம்பர் 9ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில் வராத பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள், வங்கி கணக்குகள், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாங்கி குவிக்கப்பட்ட அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் ரூ.4,500 கோடிக்கு சொத்துகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம்