கொரோனில் ஸ்வாசரி எனப்படும் மருந்து கொரோனா தொற்றை 7 நாட்களில் 100% குணப்படுத்தும் என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்ய தொடங்கிய சில மணி நேரத்தில், அந்த மருந்து குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளும் வரை, மருந்தை விளம்பரம் செய்ய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.
கொரோனா 100% குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று அறிவித்திருக்கிறது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம். இது தொடர்பாக பாபா ராம்தேவ் கூறியதாவது, “நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தின் பெயர் கொரோனில் ஸ்வாசரி. இந்த மருந்தை டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 280 கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்திருக்கிறோம்.
உலக நாடுகள் இன்னமும் கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்கவில்லை. இந்த தருணத்தில் எங்களது பதஞ்சலி நிறுவனம் மருந்து தயாரித்திருப்பதை பெருமையாக கொள்கிறோம். என்.ஐ.எம்.எஸ். என்ற பல்கலைக் கழகத்தின் உதவியுடன் நாங்கள் கொரோனா நோயாளிகளுக்கு எங்களது மருந்தை கொடுத்து ஆய்வு செய்தோம். 3 நாட்களில் 69% நோயாளிகளும், 7 நாட்களில் 100% நோயாளிகளும் குணமடைந்துவிட்டனர்.
கொரோனில் ஸ்வாசரி மாத்திரை பேராசிரியர் பல்பீர் சிங் தோமர், ஆச்சார்யா ஆகியோரது முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. பதஞ்சலியின் கொரோனா மருந்து விலை ரூ545. இதனை 30 நாட்கள் பயன்படுத்தலாம். இந்த மருந்தை பரிசோதிக்க தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்தோம்” என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
[su_image_carousel source=”media: 15154,15155″ crop=”none” autoplay=”2″ image_size=”medium_large”]
மேலும் வாசிக்க: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து 1000 பேரை குணப்படுத்தியதாக பதஞ்சலி பகீர் தகவல்
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து குறித்த ஊடக செய்தி தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், மருந்து குறித்த விவரங்கள் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவரை இந்த மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதஞ்சலி நிறுவனத்தால் கூறப்பட்ட மருத்துவ ஆய்வுகள் குறித்த தகவல்கள் அமைச்சகத்திற்கு தெரியவில்லை. கொரோனா தொற்றை குணப்படுத்தும் எனக் கோரப்பட்ட மருந்தின் பெயர், கலவை, இந்த ஆய்வு நடத்தப்பட்ட இடங்கள், மருத்துவமனைகள், எத்தனை பேரிடம் பரிசோதிக்கப்பட்டன என்ற விவரங்கள், நிறுவன நெறிமுறை குழு அனுமதி, இந்திய மருத்துவ பரிசோதனைகள் பதிவின் அனுமதி, ஆய்வின் முடிவுகள் ஆகியவற்றை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் உத்தரகண்ட் மாநில அரசிடம் இந்த மருந்து உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களின் நகல்கள், அனுமதி விவரங்கள் ஆகியவற்றையும் ஆயுஷ் அமைச்சகம் கோரியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய மருந்துகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரி, “பொதுவாக ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சந்தைக்கு வருவதற்கு குறைந்தது மூன்று வருடங்கள் வரை ஆகும்.
சில அசாதாரண சூழலில் இந்த கால அவகாசம் குறையலாம். இருப்பினும் ஒரு புதிய மருந்து சந்தைக்கு வருவதற்கு பத்து மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை ஆகும். ஆனால் சில வாரங்களில் கொரோனில் என்ற இந்த மருந்தை கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டுவந்துள்ளது பதஞ்சலி நிறுவனம்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதஞ்சலியின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆச்சர்ய பாலகிருஷ்ணன் கூறும்போது, “நாங்கள் விஞ்ஞானிகள் குழுவை நியமித்து கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து குறித்த மருத்துவ பரிசோதனையை தங்கள் நிறுவனம் மேற்கொண்டோம். நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு எங்களது மருந்தை கொடுத்து ஆய்வு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.