குழந்தை பிறந்த பிறகு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 20 வார பெற்றோர் விடுப்பு காலம் 2 வாரங்களாக குறைத்து எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றி பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான பிறகு, ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான மெயில் அனுப்பப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50% ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்ட நிலையில், எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து ட்விட்டரில் ‘ப்ளூடிக்’ பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதுதவிர , ட்விட்டர் நிறுவனத்தில் 12 மணி நேரம் வரை வேலை செய்யவேண்டும், அலுவலத்தில் வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தம் என பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்த பிறகு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பெற்றோர் விடுப்பு 20 வாரங்களாக இருந்தது. அதை 2 வாரங்களாக எலான் மஸ்க் குறைத்து உத்தரவிட்டுள்ளார். அதாவது 140 நாட்களில் இருந்து வெறும் 14 நாட்களாக விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பயனர் ஒருவர் கூறும்போது, “ட்விட்டரில் அவமானம். இரண்டு வாரங்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு? இது சரியான வழி இல்லை” என்றார். மேலும், நன்றாக சென்றுகொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி நாசம் செய்து வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.