இந்தியாவில் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமதி அளித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கொரோனா பரவலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்க விண்ணப்பித்து இருந்தன.
இந்நிலையில், சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தாக்கல் செய்திருந்த விண்ணப்பம் தொடர்பாக நிபுணர் குழு ஆலோசித்து, கட்டுப்பாடுகளுடனான எமர்ஜென்சி பயன்பாட்டுக்கு கோவிஷீல்டு, கோவாக்சினை பயன்படுத்த மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு (CDSCO) நிபுணர் குழு பரிந்துரை செய்தது.
அதன்படி, இந்திய மருந்து கட்டுபாட்டு அமைப்பு (DCGI) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அவசரகால சூழ்நிலையில் மட்டும் தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு M/s சீரம் மற்றும் M/s பாரத் பயோடெக் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கு M/s காடிலா ஹெல்த்கேர் (M/s Cadila Healthcare) நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் தடுப்பூசிகளை இரண்டு அளவுகளில் நிர்வகிக்க வேண்டும். இரண்டு தடுப்பூசிகளையும் 2-8 டிகிரி (2-8° C) செல்சியஸில் சேமிக்க வேண்டும். போதுமான பரிசோதனைக்குப் பிறகு, நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்க CDSCO முடிவு செய்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
இதன் மூலம், முதலில் 1.7 லட்சம் முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி கிடைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த பரிந்துரையை அடுத்து, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸுடனான போருக்கு மத்தியில் சுமார் ஒரு வருட காலத்தில் இந்தியாவுக்கு 2 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற தடுப்பூசிகளை அனைத்து மக்களுக்கும் குழப்பம் ஏதுமில்லாமல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், நாடு முழுவதும் இதற்கான ஒத்திகை நடந்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை துவக்கம்- அமைச்சர் ஹர்ஷ்வர்தன்