துணைவேந்தர் சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் புகார் குறித்த விசாரணையை உடனே நிறுத்த தமிழக முதல்வருக்கு ஆளுனர் பன்வாரிலால் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா, விதிகளை மீறி அவரது மகள் உள்பட பலருக்கு பணி நியமனம் உள்பட பல்வேறு முறைகேடுகள் மற்றும் சுமார் ரூ.280 கோடி ஊழலில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது தமிழக அரசு. மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக சூரப்பா மீதான புகார்கள் குறித்து நீதிபதி கலையரசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதில் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அளிக்காததால், இன்று அண்ணா பல்கலைக்கழக கருணாமூர்த்தி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சூரப்பா மீதான விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் 1 மாதம் கழித்து, கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சூரப்பா மீது விசாரிக்க குழு அமைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

துணைவேந்தரை விசாரிப்பதற்கான குழுவை தனக்கு தெரியாமல் அமைத்துள்ளது தவறான நடவடிக்கையாகும். மேலும் நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு விசாரணையை உடனே நிறுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

8 வழிச்சாலையை புதிய திட்டம் தயாரித்து செயல்படுத்தலாம்- உச்சநீதிமன்றம்